தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 6,000 கொலைகள்; 55,000 கொள்ளைகள்: அன்புமணி குற்றச்சாட்டு
தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 6,000 கொலைகள்; 55,000 கொள்ளைகள்: அன்புமணி குற்றச்சாட்டு
ADDED : நவ 14, 2024 04:44 AM

சென்னை: ''தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில், 6,000 கொலைகள், 55,000 கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
ஏ.ஐ.ஓ.பி.சி., எனப்படும் அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு ரயில்வே ஊழியர் சங்கம் சார்பில், ரயில்வேயில் காலியிடங்களை நிரப்ப வேண்டும்; பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது உட்பட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை தெற்கு ரயில் தலைமை அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அன்புமணி கலந்துகொண்டு பேசினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு, மூன்று உறுப்பினர்களை நியமிக்க வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எனவே, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்த விபரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இதன் வாயிலாக, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர், 69 சதவீதத்துக்கு மேல் உள்ளனர் என்பதை நிரூபணம் செய்ய வேண்டும்.
இதை செய்யாமல், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என முதல்வர் கூறுவதை ஏற்க முடியாது.
தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், 6,000 கொலைகள், 55,000 கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது.
தி.மு.க., அளித்த 550 தேர்தல் வாக்குறுதிகளில், இதுவரை 45 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி, தமிழக மக்களும், தமிழக அரசு மீது கோபத்தில் உள்ளனர். இது வரும் தேர்தலில் தெரியும்.
வரும் 2026 சட்டசபை தேர்தலுக்குப் பின், கூட்டணி ஆட்சி அமையும்; அதில், பா.ம.க., இடம்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.