ADDED : டிச 23, 2024 05:06 AM

சென்னை : தமிழகத்தில், இம்மாதம் மழைக்கு, 61 பேர் இறந்துள்ளனர்.
இம்மாதம், 'பெஞ்சல்' புயல் மற்றும் கனமழை காரணமாக, பல மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த முதல் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, மழைக்கு, 17 பெண்கள், 14 குழந்தைகள், 30 ஆண்கள் என மொத்தம், 61 பேர் இறந்து உள்ளனர்.
அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில், 19; திருவண்ணாமலை 14; கடலுார் மாவட்டத்தில் ஒன்பது பேர் இறந்துள்ளனர்.
இவர்களில், 19 பேர் வெள்ளத்தில் சிக்கியும், 12 பேர் சுவர் இடிந்தும்; ஒன்பது பேர் மின்சாரம் தாக்கியும்; ஏழு பேர் நிலச்சரிவில் சிக்கியும் இறந்துள்ளனர். மற்றவர்கள் மின்னல் தாக்கி, மரம் விழுந்து என, பல்வேறு சம்பவங்களில் இறந்துள்ளனர்.
மழை மற்றும் வெள்ளத்தால், 967 குடிசைகள் முழுமையாகவும், 15,174 குடிசைகள் பகுதியாகவும்; 42 கான்கிரீட் வீடுகள் முழுமையாகவும், 3,840 வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துஉள்ளன.
கோழி, வாத்து போன்ற பறவையினங்கள் 3 லட்சத்து 27,951; 4,410 கால்நடைகள் இறந்துஉள்ளன. மழையில், 4.77 லட்சம் ஏக்கர் வேளாண் பயிர்கள்; 20,896 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளன என, அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

