3 ஆண்டுகளில் 636 கைதிகள் முன்கூட்டியே விடுதலை: ஐகோர்ட்டில் அரசு தகவல்
3 ஆண்டுகளில் 636 கைதிகள் முன்கூட்டியே விடுதலை: ஐகோர்ட்டில் அரசு தகவல்
ADDED : டிச 21, 2025 09:31 AM

சென்னை: 'தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், 636 கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்' என, சென்னைஉயர் நீதிமன்றத்தில், தமிழக உள்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, சிறைகளில் உள்ள கைதிகளின் தண்டனை குறைப்பு, முன்கூட்டி விடுதலை தொடர்பான மாநில அரசின் கொள்கைகளை கண்காணிக்க, உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அதன் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது.
நீதிபதிகள் பி.வேல் முருகன், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன், தமிழக உள்துறை சார்பில் விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்வது, 'பரோல்' விடுமுறை வழங்குவது தொடர்பாக, 2023ம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறைகளில், 14 ஆண்டுகள் தண்டனையை முடித்த, 307 கைதிகளில், 43 பேர், முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க, தகுதி பெற்று உள்ளனர். பாலியல் வழக்கு களில், 'போக்சோ' வழக்கு களில் தண்டிக்கப்பட்ட கைதிகள், முன்கூட்டி விடுதலை பெற தகுதியில்லை. இது தவிர, 2022 முதல் 2025ம் ஆண்டு வரை, 636 கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை, ஜன., 6ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

