புகையிலை பொருட்கள் விற்ற 6,500 கடைகளுக்கு 'சீல்' வைப்பு
புகையிலை பொருட்கள் விற்ற 6,500 கடைகளுக்கு 'சீல்' வைப்பு
ADDED : பிப் 16, 2024 12:51 AM
சென்னை:''தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 6,500 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை கோட்டூர்புரம், அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில், அடையாறு புற்றுநோய் நிறுவனம் நடத்தும், இளைஞர்கள் நல விழா நேற்று நடந்தது. இதில், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்று பேசியதாவது:
தமிழகத்தில் புகையிலை பொருட்கள் கட்டுப்படுத்துதல், அவற்றால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளை தடுத்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. ராணிப்பேட்டை, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்துார் ஆகிய நான்கு மாவட்டங்களில், 54 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இங்கு, தோல் பதனிடுதல், சாய தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், நான்கரை லட்சம் பேருக்கு, புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புற்றுநோய் கண்டறியப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லுாரி வளாகங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில், மாநிலம் முழுதும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 6,500 கடைகள் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.