குறைந்த விலைக்கு தங்க நகை தருவதாக கூறியவரை கொலை செய்த 7 பேர் கைது; 14 நாட்களுக்கு பின் உடல் தோண்டி பரிசோதனை
குறைந்த விலைக்கு தங்க நகை தருவதாக கூறியவரை கொலை செய்த 7 பேர் கைது; 14 நாட்களுக்கு பின் உடல் தோண்டி பரிசோதனை
ADDED : ஏப் 29, 2025 07:00 AM

தேனி: குறைந்த விலைக்கு தங்க நகை தருவதாகக்கூறிய பெங்களூரு திலீப்பை, போலி நகை கொடுத்து ஏமாற்றுபவர் எனக்கருதி தேனியில் கொலை செய்து புதைத்தனர். 14 நாட்களுக்கு பின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது. இவ்வழக்கில் தேனி கருவேல்நாயக்கன்பட்டி முகேஷ்பாண்டி 25, ஆகாஷ் 19, சக்கரைப்பட்டி இளையராஜா 37, முருகன் 45, முத்துப்பாண்டி 19, முத்தனம்பட்டி சதீஷ்குமார் 32, சவுமியன் 31, ஆகிய ஏழு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தேனி அருகே அன்னஞ்சி விலக்கு ஆவின் டீ கடை உரிமையாளர் ஜெயக்குமார் மகன் சஞ்சய். இவரிடம் 2 ஆண்டுகளுக்கு முன் கர்நாடகாவை சேர்ந்த சிலர் குறைந்த விலைக்கு தங்க நகை தருவதாக கூறி, போலி தங்க நகைகளை கொடுத்து ரூ.1.50 லட்சம் மோசடி செய்தனர். ஆண்டிபட்டியில் சஞ்சய்க்கு சொந்தமான சிப்ஸ் கடை உள்ளது. அங்கு பங்களாமேட்டை சேர்ந்த ஊழியர் மோகன் வேலை செய்தார். ஏப்.,14ல் பெங்களூரு மடுவாலாவை சேர்ந்த திலீப் 40, சிப்ஸ் கடைக்கு சென்று, மோகனிடம் பொருட்கள் வாங்கிவிட்டு, 'பணம் பற்றாக்குறையாக உள்ளது, எங்களிடம் தங்க நகை உள்ளது. குறைந்த விலைக்கு தருகிறோம் வாங்கிக்கொள்கிறீர்களா,' எனக் கேட்டுள்ளார். மோகன் அலைபேசியில் சஞ்சய், ஜெயக்குமாருக்கு தகவல் அளித்தார். மறுநாள் திலீப், அவரது உறவினர் கலுவா இருவரையும் அலைபேசியில் அழைத்த மோகன், தேனி புது பஸ் ஸ்டாண்டிற்கு வரக் கூறினார். அங்கு வந்த இருவரையும், டூவீலரில் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கட்சி பிரமுகரின் தோட்டத்திற்கு மோகன் அழைத்துசென்று மற்றவர்களையும் வரவழைத்து தாக்கினர். தோட்டத்திற்கு அருகில் இருந்தவர்கள் திட்டியதால், ஜல்லிபட்டியில் உள்ள முருகன் தோட்டத்திற்கு இருவரையும் காரில் கடத்திச் சென்றனர். அங்கு இருவரையும் கட்டி வைத்து சிலர் தென்னை மட்டையால் தாக்கி, போலி நகை கொடுத்து ஏமாற்றுவதில் உங்களுடன் இன்னும் எத்தனை பேர் உள்ளனர். எங்களை மாதிரி எத்தனை பேரிடம் ஏமாற்றி உள்ளீர்கள்,' என கேட்டு மிரட்டினர்.
காயமடைந்த திலீப் இறந்தார். அதிகாலை 12:00 மணிக்கு ஜல்லிபட்டி பகுதியில் கலுவாவை இறக்கி விட்டனர். பின் மண் அள்ளும் இயந்திரத்தை இயக்கும் நபரை அழைத்து ஜல்லிபட்டி குறவன்குளம் கரையில் குழிதோண்ட கூறினர். குழி தோண்டிய டிரைவருக்கு தெரியாமல் திலீப் உடலை போர்வையால் சுற்றி, குழியில் புதைத்து சென்றனர்.
7 பேர் கைது
இந்நிலையில் கலுவா தப்பிச் சென்று பெங்களூருவில் உள்ள உறவினர் நிர்மலாவிடம் விபரம் கூறினார். அவரது புகாரில் தேனி இன்ஸ்பெக்டர்கள் ஜவஹர், ராமலட்சுமி தலைமையிலான தனிப்படையினர் திலீப்பை கொலை செய்து புதைத்ததாக முகேஷ்பாண்டி, ஆகாஷ், இளையராஜா, முருகன், சதீஷ்குமார், முத்துப்பாண்டி, சவுமியன் ஆகிய ஏழு பேரை நேற்று கைது செய்தனர்.
அவர்கள் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று ஜல்லிபட்டி குறவன்குளம் கரையில் புதைக்கப்பட்ட திலீப்பின் உடல், தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பின் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவானவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.