நித்தியானந்தா ஆசிரம சீல்களை அகற்றிய 7 சீடர்கள் கைது
நித்தியானந்தா ஆசிரம சீல்களை அகற்றிய 7 சீடர்கள் கைது
ADDED : மார் 25, 2025 05:52 AM

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்துாரில் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு வைத்த சீல்களை அகற்றி உள்ளே சென்ற சீடர்கள் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே கோதை நாச்சியார்புரம், சேத்துார் ஆகிய இடங்களில் தனியார் சார்பில் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு 40 ஏக்கரில் இடம் வழங்கப்பட்டது. இங்கு ஆசிரமங்கள கட்டப்பட்டு நித்தியானந்தா சீடர்கள் தங்கி வழிபட்டு வந்தனர்.
நித்தியானந்தா குறித்து சர்ச்சை வெளியானதை அடுத்து தானம் வழங்கிய இடங்களின் பத்திரங்களை ரத்து செய்யக்கோரி தானமாக கொடுத்தவர் சிவகாசி ஆர்.டி.ஓ.,விடம் மனு செய்தார்.
அந்த இடங்களை இரு தரப்பினரும் பயன்படுத்தக் கூடாது என ஆர்.டி.ஓ., பிரியா ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
இதையடுத்து தாசில்தார் ராமசுப்பிரமணியன் மார்ச்21ல் இரு ஆசிரமங்களிலும் இருந்த சீடர்களை வெளியேற்றி சீல் வைத்தார்.
நேற்று அதிகாலை இரு ஆசிரமங்களின் சீல்களை உடைத்து மீண்டும் சீடர்கள் உள்ளே சென்றனர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் போலீசில் புகார் அளித்தனர்.
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் ஆசிரமத்தில் புகுந்த உதயகுமார், தீபா, பிரேமா, தாமரைசெல்வி, ரேவதி, சேத்துார் ஆசிரமத்தில் புகுந்த நித்யா சாரானந்த சுவாமி, நித்யா சுத்த ஆத்மானந்த சுவாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.