'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்களில் 7 லட்சம் பேர் பயன்
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்களில் 7 லட்சம் பேர் பயன்
ADDED : அக் 25, 2025 10:18 PM
மாநிலம் முழுதும் நடந்து வரும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில், ஏழு லட்சம் பேர் மருத்துவ பரிசோதனை செய்து, நலம் பெற்றுள்ளனர்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் நடந்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமை, அமைச்சர் சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின், அவர் கூறியதாவது:
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், ஆக., 2ம் தேதி துவக்கப்பட்டு, இதுவரை 407 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாமில், பொது மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல், மகப்பேறு உள்ளிட்ட பல்துறை மருத்துவர்களால், ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன் பெற்றுள்ளனர்.
அத்துடன் முகாம் நடக்கும் இடங்களில், 26,819 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், 21,191 பேருக்கு முதல்வர் காப்பீடு திட்ட அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.
பருவ மழையை ஒட்டி காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு, மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 4.68 கோடி பேர் தொடர் சேவை பெற்று பயனடைந்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

