இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கு 7 பேர் பரிந்துரை
இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கு 7 பேர் பரிந்துரை
ADDED : மார் 18, 2024 06:06 AM

சென்னை : திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய இரு தொகுதிகளுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வேட்பாளர் தேர்வு செய்யும் நிர்வாக குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
மாநில செயலர் முத்தரசன் தலைமையில் நடந்த நிர்வாக குழு ஆலோசனை கூட்டத்தில், 31 பேர் பங்கேற்றனர். இதில், திருப்பூர் தொகுதிக்கு ஈரோடு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பாப்பா மோகன், ரவி, ஸ்டாலின் குணசேகரன், மாநில துணை செயலர் பெரியசாமி, தற்போதைய எம்.பி., சுப்பராயன் ஆகியோரை மாவட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.
அதேபோல, நாகப்பட்டினம் தொகுதியில் தற்போதைய எம்.பி., செல்வராஜ், மாவட்ட செயலர் செல்வராஜ், லெனின், ராஜா ஆகியோர் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு பேர் சிட்டிங் எம்.பி.,க்கள். ஏழு பேர் புதுமுகங்கள்.
கட்சி விதிகளின்படி, இரண்டு முறைக்கு மேல் ஒரு நிர்வாகி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதாலும், 70 வயதுக்கு மேற்பட்டவர், மற்றவர்களுக்கு வழிவிட்டு, கட்சி பொறுப்பிலும் இருக்கக்கூடாது என்பதாலும், இரண்டு தொகுதிக்கும் புதுமுகங்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அக்கட்சியின் நிர்வாக்குழு கூட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. இதில் வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

