ஒரே பைக்கில் மாணவர்கள் 7 பேர் பயணம்: நடவடிக்கை பாயுமா?
ஒரே பைக்கில் மாணவர்கள் 7 பேர் பயணம்: நடவடிக்கை பாயுமா?
ADDED : ஏப் 22, 2025 01:16 PM

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் 7 பேர் ஒரே டூவீலரில் அதிவேகத்தில் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு, 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இறுதி ஆண்டு தேர்வு முடிந்த நிலையில், 8ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஒரே பைக்கில், பள்ளி சீருடையில் மாணவர்கள் ஏழு பேர் பயணித்தனர். இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
அரசு பள்ளி மாணவர்கள் 7 பேர் ஒரே டூவீலரில் அதிவேகத்தில் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் வருகிறது. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
பள்ளி மாணவர்களை பைக் ஓட்ட பெற்றோர் அனுமதிப்பது தவறு. மாணவர்களை பைக் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

