UPDATED : நவ 29, 2026 12:00 AM
ADDED : நவ 28, 2026 11:16 PM
– நமது நிருபர் –: வங்கிகணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காததால், மாநிலம் முழுதும், 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர், முதியோர் மற்றும் இதர சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
சமூக பாதுகாப்பு திட்டத்தில், முதியோர், கணவரை இழந்தோர், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப் படுகிறது.
செப்டம்பர் முதல் ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை முறையில் உதவித்தொகை செலுத்தப்படுகிறது.
இதற்காக பயனாளிகள் தங்கள் வங்கிகணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதுடன், இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகத்தின்(என்.பி.சி.ஐ.,) மேப்பிங் முறையிலும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பலர், ஆதார் எண்ணை இணைக்காததால் உதவித்தொகை கிடைக்கவில்லை.
கோவையில், 72 ஆயிரம் பேர் முதியோர் உதவித்தொகை பெறுகின்றனர்.
ஆதார் இணைக்காததால், 6,000 பேருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. இதனால், உதவித்தொகை நிறுத்தப்பட்டதாகக் கூறி, பயனாளிகள் புகார் அளித்து வருகின்றனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
என்.பி.சி.ஐ., இணையதளத்தில் உள்ள, ஆதார் இணைப்பு வசதி வாயிலாக ஆதார் மற்றும் வங்கிகணக்கு விபரங்களை பதிவு செய்யலாம். இதை செய்யத் தெரியாதவர்கள், அருகில் உள்ள இ- – சேவை மையங்கள் அல்லது வங்கிகளுக்கு நேரில் சென்று பதிவு செய்யலாம். தபால் அலுவலகம் வாயிலாக உதவித்தொகை பெறுபவர்களும் இதே நடைமுறை பின்பற்றலாம்.
கடந்த மாதமே அனைத்து பயனாளிகளும் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் மாநிலம் முழுவதும், 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இணைக்கவில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
