குற்றங்களை தடுக்க 71,290 கேமராக்கள்; 10 மாவட்டங்களில் 25,754 பொருத்தம் கேமராக்கள்
குற்றங்களை தடுக்க 71,290 கேமராக்கள்; 10 மாவட்டங்களில் 25,754 பொருத்தம் கேமராக்கள்
ADDED : ஜூன் 01, 2025 03:32 AM

மதுரை: தென்மாவட்டங்களில் குற்றங்களை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை காக்கவும் 10 மாதங்களில் 25,764 கேமராக்கள் உட்பட மொத்தம் 71,290 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
குற்றங்களை தடுப்பதும், கண்டறிவதும், பொதுமக்கள் பாதுகாப்பு, கண்காணிப்பை மேம்படுத்தும் நோக்கிலும் தென்மாவட்டங்களில் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தென்மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டார். இதன்படி 2024 ஆகஸ்ட் முதல் 2025 மே வரை மொத்தமாக 25,754 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 10 மாவட்டங்களில் மொத்தம் 71,290 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாக ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தென்மாவட்டங்களில் கடந்த 10 மாதங்களில் மதுரை மாவட்டத்தில் - - 1727, விருதுநகர் - 1235, திண்டுக்கல் - 1155, தேனி - 2729, ராமநாதபுரம் - 2509, சிவகங்கை - 1495, திருநெல்வேலி - 2009, தென்காசி- 4023, துாத்துக்குடி- 1386, கன்னியாகுமரியில் 7486 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் 3 நவீன கன்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டு 510 கேமராக்கள் மூலம் 4 சப்டிவிஷனுக்குட்பட்ட பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன.
தேனி மாவட்டத்திலும் நவீன கன்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு - கேரளா எல்லை சோதனைச்சாவடிகளில் வாகன பதிவெண்களை பதிவு செய்யும் 14 கேமராக்கள் உட்பட 28 கேமராக்கள் நிறுவப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்திலும் வாகன பதிவெண்களை பதிவு செய்யும் 17 கேமராக்கள் உட்பட 70 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
திருச்செந்துார் கோயில் பகுதிகளில் கூட்டத்தை கண்காணிக்க கன்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டு 32 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்செந்துார் முழுவதையும் கண்காணிக்க 150க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதன்மூலம் தென்மாவட்டங்களில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.