75,702 பேருக்கு காசநோய்; ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி தகவல்!
75,702 பேருக்கு காசநோய்; ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி தகவல்!
ADDED : நவ 02, 2024 10:36 AM

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டு புதிதாக 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. 2025ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் நோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என, காசநோய் ஒழிப்புத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.
மாநிலம் முழுவதும் காச நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் களப்பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகின்றன. வீடுகளிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு நடமாடும் 'ஸ்கேன்' கருவிகளை வீடுகளுக்கே அனுப்பி 'ஸ்கேன்' எடுக்கப்படுகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளால், அந்நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களில், 84 சதவீதம் பேர் முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்தப்படுகின்றனர். தொடர் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவர்கள் குணமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடப்பாண்டு நாடு முழுவதும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டவர் களின் தரவுகளை சுகாதாரத் துறை ஆய்வு செய்தபோது, 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அந்நோய் இருந்தது கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருந்தது. அவர்களில், தனியார் மருத்துவமனைகளில் 24,685 பேரும், அரசு மருத்துவமனைகளில் 50,837 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்தாண்டு இதே காலகட்டத்தில் தமிழகத்தில் எண்ணிக்கை, 3 சதவீதம் அதிகமாக இருந்தது குறிப் பிடத்தக்கது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.