UPDATED : அக் 22, 2024 02:49 AM
ADDED : அக் 22, 2024 02:47 AM

சென்னை :   'தீபாவளியை ஒட்டி, 7,810 சிறப்பு பஸ்கள் உட்பட, 14,086 பஸ்கள் இயக்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச் சர் சிவசங்கர் கூறினார்.
தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம், அமைச்சர் சிவசங்கர் தலைமையில், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.
மூன்று நாட்கள்
போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா, போக்குவரத்து துறை ஆணையர் சுன்சோங்கம்ஜடக் சிரு மற்றும் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் பங்கேற்றனர்.
பின், அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 28 முதல் 30 வரை, சென்னை யில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,092 பஸ்களுடன், 4,900 சிறப்பு பஸ்கள் என, மூன்று நாட்களுக்கு சேர்த்து 11,176 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மூன்று நாட்களுக்கு, 2,910 சிறப்பு பஸ்களும் என மொத்தமாக 14,086 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி முடிந்த பின், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப, நவம்பர், 2 முதல் 4 வரையில், தினமும் இயக்கப்படும் 2,092 பஸ்களுடன் சேர்த்து, 3,165 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். மூன்று நாட்களுக்கும் சேர்த்து, 9,441 பஸ்கள் இயக்கப்படும்.
பிற முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு, 3,165 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதாவது மொத்தமாக, 12,606 பஸ்கள் இயக்கப்படும்.
24 மணி நேரம்
பயணியர், tnstc செயலி மற்றும் www.tnstc.in இணையதளம் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதுதவிர, கிளாம்பாக்கத்தில் - 7, கோயம்பேடில் - 2 சிறப்பு கவுன்டர்கள், வரும் 28 முதல் 30 வரை செயல்படும். பயணியரின் நலன் கருதி, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, 24 மணி நேரமும் செயல்படும்.
தீபாவளி பயணத்திற்கு இதுவரை 1.02 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். வரும் 24ம் தேதி ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிவசங்கர்
போக்குவரத்து துறை அமைச்சர்

