ADDED : நவ 09, 2025 04:54 AM
சென்னை: 'மருத்துவ படிப்புகளுக்கான, அகில இந்திய கலந்தாய்வின் மூன்றாம் சுற்று முடிவில், நாடு முழுதும், 802 எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன' என, இந்திய மருத்துவ கலந்தாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மட்டும், 136 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. அதில், ஒன்பது இடங்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியிலும், 22 இடங்கள், மாநில அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் காலியாக உள்ளன.
மூன்று சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், 389 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், 334 நிகர் நிலை மருத்துவப் பல்கலை இடங்கள், 38 மத்திய கல்வி நிறுவன இடங்கள் நிரம்பவில்லை.
அதேபோல், ஜெயின் சிறுபான்மையினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், பாதுகாப்பு படையினரின் குழந்தைகள் மற்றும் கணவரை இழந்தவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் 41 காலியாக உள்ளன.
முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்றவர்கள், அந்த இடத்தில் சேராமல் இருந்தால், எந்த அபராதமும் இன்றி இரண்டாம் சுற்றில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், மூன்றாம் சுற்றில் வாய்ப்பை நிராகரித்தால், அரசு மருத்துவ கல்லுாரி இடங்களுக்கு 10,000 நிகர்நிலை பல்கலைக்கு, 2 லட்சம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும்.
அத்துடன், கல்லுாரி கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என, இந்திய மருத்துவ கலந்தாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

