ADDED : பிப் 16, 2024 02:38 AM
சென்னை:மோசடி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்த 827 பேருக்கு 7.91 கோடி ரூபாய் இழப்பீடு பெற்று தரப்பட்டுள்ளது.
ஆருத்ரா ஐ.எப்.எஸ். உள்ளிட்ட நிதி நிறுவன மோசடிகள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். முதலீட்டாளர்களுக்கு சட்ட ரீதியாக இழப்பீடு தொகை பெற்றுத்தரும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தாண்டு ஜனவரியில் மட்டும் மோசடி தொடர்பாக 21 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் தொடர்புடைய 81 அசையா சொத்துக்கள்; இரண்டு வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர். மேலும் முறையற்ற வகையில் விற்கப்பட்ட 10 வகையான அசையாச் சொத்துக்களை அடையாளம் கண்டுள்ளனர். இதன் மதிப்பு 10.37 கோடி ரூபாய். மோசடி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்த 827 பேருக்கு நீதிமன்றம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வாயிலாக 7.91 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது என டி.ஜி.பி. அலுவலகம் நேற்று அறிவித்துள்ளது.