புலிகள் சரணாலய கிராமங்களில் 85 சதவீதம் பேர் இடமாற்றம்
புலிகள் சரணாலய கிராமங்களில் 85 சதவீதம் பேர் இடமாற்றம்
ADDED : பிப் 04, 2024 08:24 AM

சென்னை : முதுமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள, 12 கிராமங்களில், 85 சதவீதம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டதால் உத்தரவு பிறப்பிக்க அவசியமில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுக்குழி கிராமத்தைச் சேர்ந்த மறுவாழ்வு சங்கத்தின் தலைவர் தாக்கல் செய்த மனுவில், 'கூடலுார் தாலுகாவில் உள்ள முதுக்குழி, நெல்லிக்கரை, நாகம்பள்ளி உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள பட்டா, வருவாய் நிலங்களில், புலிகள் பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்தக் கூடாது; கிராம மக்களை வேறு இடங்களுக்கு மாற்றக் கூடாது' என, கோரியிருந்தார்.
இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மத்திய வனத்துறை சார்பில், வழக்கறிஞர் ஆதி.குமரகுரு ஆஜரானார்.
தமிழக அரசு சார்பில், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, ''681 குடும்பங்கள் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டு விட்டன. 105 குடும்பங்களில், 32 குடும்பங்கள் இழப்பீடு பெற்றுள்ளன. மற்ற குடும்பங்களை இடமாற்றம் செய்வதும், பரிசீலனையில் உள்ளது,'' என்றார்.
முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், '80 முதல் 85 சதவீதம் வரை, குடியிருப்புவாசிகள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். பெரும்பாலான குடும்பங்கள் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டு விட்டதால், இந்த வழக்கில் மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
தனிப்பட்ட நபருக்கு குறை இருந்தால், அவர்கள் அதுகுறித்து முறையிடலாம்' என்று கூறியுள்ளது.