ADDED : பிப் 05, 2025 10:02 PM
மதுரை:மதுரை திருப்பரங்குன்றத்திற்கு தடையை மீறி வந்த பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் மீது, 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதை எதிர்த்தும், முருகன் மலை முருகனுக்கே சொந்தம் என வலியுறுத்தியும் ஹிந்து முன்னணி சார்பில் நேற்று முன்தினம் அறப்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க பிப்., 3, 4ல் மதுரையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை மீறி, நேற்று முன்தினம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் முருக பக்தர்கள், ஹிந்து அமைப்பினர், பா.ஜ.,வினர் திருப்பரங்குன்றம் வந்தனர். முக்கிய நிர்வாகிகள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர்.
பக்தர்கள் திடீரென ஒன்று கூடி, கோவிலுக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்கிய வெளியூர் பக்தர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, தடையை மீறி மதுரைக்குள் நுழைந்ததாக, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட ஸ்டேஷன்களில், 16 வழக்குகளும், மதுரை மாவட்டத்தில், 26 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதே போல, மற்ற தென்மாவட்டங்களில், 44 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 86.