நகர்ப்புற ஏழை மக்களுக்காக கட்டிய 8,677 வீடுகள் விரைவில் ஒப்படைப்பு: வீட்டு வசதி வாரியம் தகவல்
நகர்ப்புற ஏழை மக்களுக்காக கட்டிய 8,677 வீடுகள் விரைவில் ஒப்படைப்பு: வீட்டு வசதி வாரியம் தகவல்
ADDED : டிச 02, 2024 12:47 AM

சென்னை: 'நகர்ப்புற ஏழைகள் மறுவாழ்வுக்காக, சென்னை மற்றும் கோவையில் கட்டப்பட்டுள்ள, 8,677 வீடுகள், விரைவில் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன' என, வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், நகர்ப்புற ஏழை மக்களுக்கான, வீட்டுவசதி திட்டங்களை, மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்படுத்தி வருகிறது.
அதேசமயம் பொருளாதார அடிப்படையில், ஒவ்வொரு தரப்பினர் வாங்கும் திறனுக்கு ஏற்ற விலையில், குடியிருப்பு திட்டங்களை, வீட்டு வசதி வாரியமும் செயல்படுத்தி வருகிறது.
இதில், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர் முதல் உயர் வருவாய் பிரிவினர் வரை, அனைவருக்குமான வீடுகள் கட்டப்படுகின்றன. ஓரளவுக்கு வருவாய் உள்ளவர்கள், வங்கிக்கடன் வாயிலாக, இந்த வீடுகளை வாங்கலாம்.
இந்நிலையில், நகர்ப்புற ஏழை மக்களுக்கான மறுவாழ்வு என்ற அடிப்படையில், சென்னை மற்றும் கோவையில் சிறப்பு திட்டங்களை, வீட்டுவசதி வாரியம் உருவாக்கியது.
இதன்படி, சென்னை எர்ணாவூரில், 6,877 வீடுகள், கோவை பெரியநாயக்கன் பாளையத்தில், 1,800 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த இரு திட்டங்களிலும், கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு உள்ளதால், வீடுகள் விரைவில் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து, வீட்டுவசதி வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை எர்ணாவூரில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இதற்கான பயனாளிகள் தேர்வு முடிக்கப்பட்டு விட்டது.
இறுதி கட்டப் பணிகள் முடிந்ததும், வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவை பெரியநாயக்கன் பாளையம் திட்டத்தில், தலா, 12 லட்ச ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டன.
இதில், பங்களிப்பு தொகை செலுத்திய, 1,000 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் சிலருக்கு வீட்டுக்கான சாவி வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. எஞ்சிய, 800 வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்ததும் வீடுகள் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.