பார்வையிழந்த 87 வயது கைதிக்கு ஆறு மாதம் இடைக்கால ஜாமின்
பார்வையிழந்த 87 வயது கைதிக்கு ஆறு மாதம் இடைக்கால ஜாமின்
ADDED : ஜன 31, 2025 10:40 PM
சென்னை,:கண் பார்வை இழந்த நிலையில், புழல் சிறையில் தவித்த, 87 வயது முதியவருக்கு, ஆறு மாதம் இடைக்கால ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சிறை கைதிகள் உரிமை அமைப்பின் இயக்குனர் வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், 'புழல் சிறைக்கு சென்ற போது, ராஜாமணி என்ற, 87 வயது தண்டனை கைதியை பார்த்தேன். அவருக்கு இரண்டு கண்களில் பார்வை பறிபோயுள்ளது.
'கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, 2013 முதல் சிறையில் உள்ளார். பத்தாண்டு சிறை தண்டனையை முடித்து விட்டதால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி, அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். அதை பரிசீலிக்கவில்லை.
'எனவே, என் கோரிக்கையை பரிசீலித்து, கண் பார்வை இழந்த ராஜாமணியை முன்கூட்டியே விடுவிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று, குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, 'ராஜாமணியை முன்கூட்டியே விடுதலை செய்ய, மருத்துவ அறிவுரை கழகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அரசு அதை பரிசீலித்து வருகிறது' என்று, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் புகழேந்தி, 'வயதான காலத்தில் கண் பார்வையின்றி, ராஜாமணி சிறையில் அவதிப்பட்டு வருகிறார்' என்றார்.
இதையடுத்து, கண் பார்வை இழந்த, 87 வயது ராஜாமணிக்கு, ஆறு மாதம் இடைக்கால ஜாமின் வழங்கிய நீதிபதிகள், 'இந்த ஆறு மாதத்திற்குள் அவரை முன்கூட்டியே விடுதலை செய்து, அரசு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
'இடைக்கால ஜாமின் பெற்ற ராஜாமணியை, மயிலாப்பூரில் உள்ள, 'ப்ரிசன் மினிஸ்ட்ரி' என்ற தொண்டு அமைப்பிடம், சிறை நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும்' என்று, உத்தரவிட்டனர்.