முதல்வரின் முகவரி துறையில் 7 மாதங்களில் 8.70 லட்சம் மனு நிலுவை
முதல்வரின் முகவரி துறையில் 7 மாதங்களில் 8.70 லட்சம் மனு நிலுவை
ADDED : செப் 11, 2025 11:57 PM
சென்னை:'முதல்வரின் முகவரி துறைக்கு, பொது மக்கள் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை அனுப்பிய, 21 லட்சம் மனுக்களில், 8.70 லட்சம் மனுக்கள் நிலுவையில் உள்ளன' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், 2021ல் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும், பொதுமக்கள் மனு அளிக்க, 'முதல்வரின் முகவரி' என, தனி துறை துவக்கப்பட்டது. இத்துறைக்கு பொது மக்கள் தபால் வாயிலாகவும், ஆன்லைன் முறையிலும் மனுக்களை அனுப்புகின்றனர். அவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படுகின்றன.
அவற்றுக்கு தீர்வு காணப்படுவதை, ஆன்லைன் வழியே கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் தங்கள் மனு எங்கு உள்ளது? என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அறியவும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இத்துறைக்கு வரும் மனுக்கள் மீதான நடவடிக்கையை, குறிப்பிட்ட கால இடைவெளியில், தலைமைச் செயலர் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். எனினும், அங்கு தீர்வு காண வேண்டிய மனுக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது குறித்து வருவாய் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் நடப்பாண்டு, ஜன., முதல் ஜூலை இறுதி வரை, முதல்வரின் முகவரி துறைக்கு, 21.24 லட்சம் மனுக்கள் வந்துள்ளன. இவற்றில், 9.62 லட்சம் மனுக்கள் ஏற்கப் பட்டு, நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
பல்வேறு காரணங்கள் அடிப்படையில், 2.91 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், 8.70 லட்சம் மனுக்கள் நிலுவையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.