ஹவாலா பணம் 88 லட்சம் சிக்கியது :ஆந்திராவைச் சேர்ந்த 20 பேர் கைது
ஹவாலா பணம் 88 லட்சம் சிக்கியது :ஆந்திராவைச் சேர்ந்த 20 பேர் கைது
ADDED : ஆக 24, 2011 12:58 AM
அம்பத்தூர் : அம்பத்தூரில் நேற்று இரவு போலீசார் நடத்திய வாகன சோதனையில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 88 லட்ச ரூபாய் ஹவாலா பணத்தை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை புறநகர் பகுதியில் உள்ள அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தியேட்டர் அருகே, நேற்று அதிகாலை அம்பத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திரா மாநில பதிவு பெற்ற இரண்டு ஸ்கார்பியோ மற்றும் ஒரு இண்டிகா கார், தியேட்டர் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தன.
காரின் உள்ளே வாலிபர்கள் கும்பலாக பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும்,போலீசார் காரில் சோதனை நடத்தினர். சோதனையில், காரில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. வாலிபர்களிடம் விசாரித்ததில், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் விசாரித்ததில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த ஹவாலா பணம் என தெரிய வந்தது. இதையடுத்து, கடத்தி வரப்பட்ட 88 லட்ச ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், மூன்று கார்களில் இருந்த ஆந்திராவைச் சேர்ந்த 20 பேரையும், அம்பத்தூர் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது வழக்கு பதிந்து, சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.