ADDED : நவ 15, 2024 12:28 AM
சென்னை:தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைந்தது.
சர்வதேச நிலவரங்களால் கடந்த மாதம், தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் ஆபரண தங்கம் விலை அதிகரித்தது. அம்மாதம் 30ம் தேதி, சவரன் தங்கம் 59,520 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. பின், தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இருப்பினும், புதிய உச்சத்தை எட்டவில்லை.
இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக தங்கம் விலை அதிகளவில் குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 7,045 ரூபாய்க்கும்; சவரன் 56,360 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
வெள்ளி கிராம் 101 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 6,935 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 880 ரூபாய் சரிவடைந்து, 55,480 ரூபாய்க்கு விற்பனையானது.
வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 99 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த திங்களன்று, சவரன் தங்கம் 57,760 ரூபாய்க்கு விற்பனையானது. எனவே, மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு 2,280 ரூபாய் சரிவடைந்துள்ளது.