'நெம்மேலி - 2' குடிநீர் திட்டத்தால் தினம் 9 லட்சம் பேர் பயனடைவர்: நேரு
'நெம்மேலி - 2' குடிநீர் திட்டத்தால் தினம் 9 லட்சம் பேர் பயனடைவர்: நேரு
ADDED : ஜன 07, 2024 02:05 AM

சென்னை:சென்னையில், கோடையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் 'நெம்மேலி- - 2' திட்டம் 1,516.82 கோடி ரூபாய் மதிப்பீடில், தினமும் 15 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட, கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது, சோதனை ஓட்டம் முடிந்து பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, நேற்று அங்கு உற்பத்தி செய்யப்பட்ட குடிநீரை பருகி, தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இது குறித்து, அமைச்சர் கூறியதாவது:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் தேவையை, ஏரிகள் பூர்த்தி செய்கின்றன.
பருவமழை இல்லாமல் வறட்சி காலங்களின் குடிநீர் தேவையை கருத்தில் வைத்து கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதன்படி, 10 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட முதல் உற்பத்தி நிலையம், 2010ம் ஆண்டு மீஞ்சூரில் திறக்கப்பட்டது.
இரண்டாவது நிலையம், 10 கோடி லிட்டர் உற்பத்தி திறனில், நெம்மேலி- - 1 திட்டமாக, 805.08 லட்சம் கோடியில் அமைத்து பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், 1516.82 கோடி ரூபாயில், தினமும் 15 கோடி லிட்டர் உற்பத்தி திறனில், நெம்மேலி- - 2 திட்ட பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.
மொத்தம், 48.10 கி.மீ., துாரத்தில் குழாய் பதித்து, சோதனை ஓட்டம் கண்காணிப்பில் உள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால், இயக்குதலுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இத்திட்டம் வாயிலாக, தினமும் ஒன்பது லட்சம் பேர் பயன் அடைவர். விரைவில், முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைப்பார்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன், குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் வினய், செயல் இயக்குனர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.