ADDED : பிப் 15, 2024 01:56 AM
சென்னை:''தமிழகத்தில் கால்நடை கிளை நிலையம் அமைக்க கோரி, 950 மனுக்கள் வந்துள்ளன,'' என, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று, தி.மு.க., - வரலட்சுமி கேள்விக்கு, அமைச்சர் அளித்த பதில்:
ஒரு பகுதியில் கால்நடைகள் எண்ணிக்கை 3,000த்துக்கு மேல் இருந்தால், கால்நடை கிளை நிலையம்; 5,000த்துக்கு மேல் இருந்தால், கால்நடை மருந்தகம் அமைக்கப்படும்.
முதலில் கால்நடை கிளை நிலையம் அமைக்கப்படும். கிளை நிலையத்தில் தினசரி 30 கால்நடைகள் சிகிச்சைக்கு வந்தால், கால்நடை மருந்தகமாகவும், மருந்தகத்தில் தினசரி 40க்கு மேல் கால்நடைகள் சிகிச்சைக்கு வந்தால், மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்படும்.
செங்கல்பட்டு மாவட்டம், புலிப்பாக்கத்தில் 3,300 கால்நடைகள் உள்ளதால், கால்நடை கிளை நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது; கால்நடை மருத்துவமனை அமைக்க சாத்தியக்கூறு இல்லை. திம்மாவரத்தில் கால்நடை கிளை நிலையம் அமைக்க சாத்தியக்கூறு இல்லை.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது முதல், எம்.எல்.ஏ.,க்களிடம் இருந்து, கால்நடை கிளை நிலையம் அமைக்கக் கோரி, 250 கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன.
அமைச்சர்கள், எம்.பி.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் ஆகியோரிடமிருந்து, 700 கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. அவை அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

