1946ல் இருந்து தொடர்ந்து ஓட்டு போடும் 99 வயது ஹண்டே
1946ல் இருந்து தொடர்ந்து ஓட்டு போடும் 99 வயது ஹண்டே
ADDED : ஏப் 24, 2026 04:22 AM

சென்னை: தமிழக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே, சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான ஹண்டே, சமீபத்தில் தன் 99வது பிறந்த நாளை கொண்டாடினார். இவர் எம்.ஜி.ஆர்., தலை மையிலான அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தார். தற்போது பா.ஜ.,வில் உள்ளார்.
கடந்த 1967, 1971 சட்டசபை தேர்தல்களில், சென்னை பூங்கா நகர் தொகுதியில் சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிட்டு, ஹண்டே எம்.எல்.ஏ., ஆனார். 1980ல் அண்ணா நகர் தொகுதியில் மிக குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில், கருணாநிதியிடம் தோல்வி அடைந்தார். இந்நிலையில் நேற்று, ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட பதிவில், 'நான், 99 வயதில் ஓட்டளித்ததை பெருமையாக உணர்கிறேன். ஆங்கிலேயர் ஆட்சியில், 1946ல் நடந்த சென்னை மாகாண சட்டசபை தேர்தலில், முதல் முதலாக ஓட்டளித்தேன்.
'அப்போது, நான் மருத்துவ கல்லுாரி மாணவன். அன்று முதல் அனைத்து தேர்தல்களிலும் ஓட்டுஅளித்து வருகிறேன். ஓட்டளிப்பது உரிமை மட்டுமல்ல; எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பொறுப்புமாகும். ஒவ்வொருவரின் ஓட்டும் முக்கியமானது. இதை அனைவரும் உணர வேண்டும்' என கூறியுள்ளார்.
