'பீர் குடித்த இளையராஜா ஆட்டம்': ரஜினி பேச்சுக்கு காங்., கண்டனம்
'பீர் குடித்த இளையராஜா ஆட்டம்': ரஜினி பேச்சுக்கு காங்., கண்டனம்
ADDED : செப் 15, 2025 04:14 AM

சென்னை: நடிகர் ரஜினி மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா பேச்சுக்கு, தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின், 50 ஆண்டு கால இசைப்பயணத்தை போற்றும் வகையில், அவருக்கு தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் பாராட்டு விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
விழாவில் ரஜினி பேசுகையில், ஜானி படத்தின் ரெக்கார்டிங்கின் போது, இளையராஜா அரை பாட்டில் பீர் அடித்து ஆட்டம் போட்டது, நடிகையர் குறித்த கிசுகிசுக்களை கேட்டது பற்றி கலகலப்பாக குறிப்பிட்டார். இதற்கு, தமிழக காங்., துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
இளையராஜாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் அரசு விழாவில், மதுவுக்கு மிகப்பெரிய விளம்பரம் கொடுத்துள்ளனர். ஒரு மாநிலத்தின் முதல்வர், தனக்காக ஒரு விழா எடுக்கிறார்.
அதில் பெருமையாக பேசுவதை விட்டுவிட்டு, இளையராஜா, 'சொல்லிடவா சொல்லிடவா' என கேட்பதும், 'கூறுங்கள் கூறுங்கள்' என ரஜினி சொல்வதும் கொடுமை. 'ரஜினி மைக்கை பிடித்து, இளையராஜாவின் மரியாதையை காற்றில் பறக்கவிட்டு விட்டார்.
நானும், மகேந்திரனும் மது அருந்தினோம். அங்கு வந்த இளையராஜாவிடம், நீங்களும் போடுகிறீர்களா என கேட்டேன். அரை பாட்டில் பீர் குடித்த இளையராஜா, விடியற்காலை 3:00 மணி வரை, பெரிய அலம்பல் ஆட்டம் ஆடினார்.
சினிமா நடிகையரின் கிசுகிசுக்களை பற்றி கேட்பார். அந்த பேச்சுகள் தான் அவருடைய பாட்டுகள் என ரஜினி கூறினார்.
அவர்கள் இருவர் மீதும் மக்கள் வைத்திருந்த மரியாதையை அவர்களே தாழ்த்திக் கொண்டனர்.
மேடை நாகரிகம் என ஒன்று இருக்கிறது என்பதை மறந்து, திரளாகக் கூடியிருந்த இடத்தில் இப்படி பேசுவது, சினிமா துறையில் உள்ளவர்கள் மீது மக்களுக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.