திருமண ஆசை காட்டி மோசடி 'டிவி' பாடகர் மீது வழக்குப்பதிவு
திருமண ஆசை காட்டி மோசடி 'டிவி' பாடகர் மீது வழக்குப்பதிவு
ADDED : நவ 06, 2024 11:16 PM
சென்னை:சென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்த, 30 வயது பெண், அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் அளித்து உள்ள புகார்:
கடந்த மே மாதம், சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். மேற்கு மாம்பலத்தில் வசித்து வரும் குருகுகன் அறிமுகமானார்; தனியார் 'டிவி' இசை நிகழ்ச்சியில் பாடி வருகிறார்.
என் மொபைல் போன் எண்ணை வாங்கி, நட்பாக பேசி வந்தார். தனக்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் பார்த்து வருவதாகக் கூறிய அவர், 'உன்னை எனக்கு பிடித்திருக்கிறது' என்றார். 'நான் உங்களை விட 5 வயது மூத்தவள்' என்றேன்; 'அது ஒன்றும் பிரச்னை இல்லை' என்று கூறினார்.
'நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள். இதனால் ஒத்து வராது' என, மறுப்பு தெரிவித்தேன். 'ஜாதி பெரிய விஷயமல்ல' எனக் கூறி, என் வீட்டிற்கு வந்து, பெற்றோரிடம் பெண் கேட்டார்.
என் பெற்றோரும், 'நீங்கள் சொல்வது நடைமுறைக்கு சாத்தியமில்லை. என் பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது' என, கூறி விட்டனர்; அப்போதும் அவர் விடுவதாக இல்லை.
தொடர்ந்து, எனக்கு திருமண ஆசை காட்டி வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக, ஜூலையில் என் அக்கா வீட்டில் நான் மட்டும் இருந்தபோது, அங்கு வந்தார்.
தனிமையில் இருப்பதை பயன்படுத்தி, என்னுடன் வலுக்கட்டாயமாக நெருக்கமாக இருந்தார். என்னை பதிவுத் திருமணம் செய்வதாகக் கூறியே, பலமுறை நெருக்கமாக இருந்தார்.
நான் கருவுற்றேன். இது எங்கள் வீட்டிற்கு தெரிந்தால், திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார். தற்போது, ஜாதியை காரணமாகக் கூறி, திருமணம் செய்ய மறுத்து வருகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இப்புகார் மீது, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.