டாக்டரை கத்தியால் குத்திய இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
டாக்டரை கத்தியால் குத்திய இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
UPDATED : நவ 13, 2024 10:17 PM
ADDED : நவ 13, 2024 06:09 PM

சென்னை: சென்னை கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரை கத்தியால் குத்திய இளைஞர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய தாய்க்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்று கூறி, சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி என்பவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார். கத்தியால் குத்தி விட்டு, வேகவேகமாக மருத்துவமனையை விட்டு வெளியே சென்ற அந்த நபரை, அங்கிருந்த காவலாளிகள் மற்றும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
பின்னர், இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில், விரைந்து வந்த போலீசார், விக்னேஷ் என்ற அந்த இளைஞரை கைது செய்தனர். அவர் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்து சென்றனர்.
டாக்டர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து டாக்டர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தலைமை செயலகத்தில் மருத்துவ சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில், டாக்டர் பாலாஜி மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக கிண்டி அரசு மருத்துவமனை உதவி பேராசிரியரும், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநருமான டாக்டர் சேதுராஜன் போலீஸில் புகார் அளித்தார்.
அதன்பேரில், கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல் (127(2), 132), 307, 506(II)) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தமிழ்நாடு மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட விக்னேஷை போலீசார் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பிறகு அவரை அக்., 27 வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

