ADDED : ஜூலை 26, 2011 12:38 AM
சென்னை : 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சில நாட்களாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆயினும், ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பகலில் வெயில் அடித்தாலும், இரவு நேரத்தில் சில இடங்களில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சில மணி நேரம் பெய்த மழையால், சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியது.
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் சின்ன கல்லாரில் 5, திருத்தணியில் 4, வாலாஜாபேட்டை, வால்பாறை, அவினாசி, ஆரணி, அரக்கோணத்தில் 3, வேலூர், பள்ளிப்பட்டு, பரமத்தி வேலூர், நடுவட்டம், மானாமதுரை, மேட்டுப்பட்டியில் 2, திருப்பத்தூர், ஏற்காடு, திருக்கோவிலூர், விழுப்புரம், பரூர், பொள்ளாச்சி, திருப்பூர், குந்தா பாலம், சிவகங்கை, செங்கம், திருவண்ணாமலை, செய்யார், பெரியார் அணையில் 1 செ.மீ., மழை பதிவாகியது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறும்போது, 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை நகரில் பகலில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும். நகரில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்' என்றார்.