ADDED : பிப் 03, 2024 01:20 AM

சென்னை: நகர்ப்புறங்களில் உள்ள கிறிஸ்துவ கல்லறைகளில் சடலங்களை புதைக்கும் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தமிழக நகர்ப்புறங்களில் உள்ள கிறிஸ்துவ கல்லறைகளில், சடலங்களை புதைப்பதற்கென விதிமுறைகள் உள்ளன.
அதன்படி, கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரு கல்லறையை பதிவு செய்து வாங்கியிருந்தால், அதே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உயிரிழக்கும் போது, 14 ஆண்டுகளுக்கு பின், அதே இடத்தில் அடக்கம் செய்யலாம். சிறார்களாக இருக்கும்பட்சத்தில், 12 ஆண்டுகளாக இருந்தது.
இந்த விதிமுறையால், கிறிஸ்துவ கல்லறைகளில் இடங்கள் கிடைக்காத நிலை உருவாகி உள்ளது.
எனவே, கிறிஸ்துவகல்லறைகளின் விதிமுறைகளை மாற்றி, கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
நகராட்சி நிர்வாகத்துறைக்கு, சென்னை மாநகராட்சி சில பரிந்துரைகளை அளித்தது. இதையடுத்து, கிறிஸ்துவ கல்லறைகளில் அடக்கம் செய்வதற்கான விதிமுறைகளை மாற்றி, நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
கிறிஸ்துவ கல்லறைகளில் மீண்டும் ஒரு உடலை அடக்கம்செய்வதற்கு, சவப்பெட்டி இல்லாமல் புதைக்கப்பட்ட இடத்தில், 12 மாதங்களுக்கு பின், வேறு ஒருவரின் சடலத்தை புதைக்க அனுமதிக்கப்படுகிறது
மரத்தினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட இடத்தில், 18 மாதங்களுக்கு பின், அதே குடும்பத்தை சேர்ந்த வேறு ஒருவரின் சடலத்தை புதைக்க அனுமதி
உலோகத்தினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட இடத்தில், ஏழு ஆண்டு களுக்கு பின், அதே குடும்பத்தை சேர்ந்த வேறு ஒருவரின் சடலத்தை புதைக்க அனுமதி
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ளகிறிஸ்துவ கல்லறையில் இருப்பதை போல, உடல்களை அடுக்ககப்பெட்டகங்களில் அடக்கம் செய்யவும் அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய விதி, தமிழகத்தில் உள்ளமாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள கிறிஸ்துவகல்லறைகளுக்கு பொருந்தும் என, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்வாயிலாக, கிறிஸ்துவ கல்லறைகளில் அடக்கம் செய்வதில் இட நெருக்கடி குறையும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

