சென்னை,மதுரை, நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை
சென்னை,மதுரை, நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை
ADDED : நவ 13, 2024 04:23 AM

சென்னை; வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியால், சென்னை உள்ளிட்ட, 12 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை, அக்டோபர், 15ல் துவங்கியது. ஆரம்பத்தில் இரண்டு நாட்கள் வெளுத்து வாங்கிய மழை, அதன்பின் அமைதியானது. மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் பரவலாக பெய்த மழை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் தலைகாட்டவில்லை.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களாக, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. இதன் தொடர்ச்சியாக, இதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்று, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மூன்று நாட்கள் தாமதமாக, நேற்று முன்தினம் மாலை தான் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி அளவில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை துவங்கியது; நேற்று காலை வரை பரவலாக கொட்டித் தீர்த்தது.
இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தெற்கு ஆந்திரா, தமிழக கடலோரத்தை ஒட்டி நிலவுகிறது.
இது மேலும் வலுவடையாமல், மிகவும் மெதுவாகக் கரையை நெருங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.
இன்று
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 15ல் டெல்டா மற்றும் மேற்கு மாவட்டங்களிலும், 16ல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் கன மழை பெய்யலாம்.
சென்னையில்…
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான அல்லது பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு ஆந்திர கடலோரம், தமிழக வட மாவட்டங்களை ஒட்டிய கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், அடுத்த மூன்று நாட்களுக்கு மணிக்கு, 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.