'தொண்டர்களின் கரங்களில் இரட்டை இலை வந்து சேரும்!'
'தொண்டர்களின் கரங்களில் இரட்டை இலை வந்து சேரும்!'
ADDED : டிச 06, 2024 06:55 AM

சென்னை : ''அ.தி.மு.க., தொண்டர்களின் கரங்களில் இரட்டை இலை சின்னம் வந்து சேரும்,'' என்று, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பன்னீர் செல்வம் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பின், பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, அ.தி.மு.க., தொண்டர்களின் உரிமையைப் பாதுகாக்கும் அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து, சென்னை உயர் நீதிமன்றம் சிவில் வழக்காக விசாரித்து வருகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தற்காலிகமாகதான் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை விசாரித்து, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். இரட்டை இலை சின்னம் கண்டிப்பாக தொண்டர்களின் கரங்களில் வந்து சேரும்.
அ.தி.மு.க., ஆய்வுக் கூட்டங்களில் நடக்கும் மோதல்களை தொண்டர்களும், மக்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க., சக்திகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி பெற முடியும். தொண்டர்களின் ஒட்டுமொத்த குரலும் இதுதான்.
பொதுக்குழுவில் கட்சியின் வரவு -- செலவு கணக்குகளை வாசிக்கக்கூட, என்னை அனுமதிக்கவில்லை. சர்வாதிகாரத்துடன் கட்சியை நடத்துகின்றனர் என்பதற்கு, சமீப காலங்களில் நடந்த பொதுக்குழு கூட்டங்களே உதாரணம். இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலா அஞ்சலி
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்டோரும் நேற்று, ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.