பெண் நீதிபதிக்கு காதல் தொல்லை; தொழில் செய்ய வழக்கறிஞருக்கு தடை
பெண் நீதிபதிக்கு காதல் தொல்லை; தொழில் செய்ய வழக்கறிஞருக்கு தடை
ADDED : அக் 31, 2024 04:27 AM

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவராஜ் என்பவர் தொழில் செய்ய தடை விதித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக, பார் கவுன்சில் தலைவர் வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜ் கூறியதாவது:
வழக்கறிஞர் சிவராஜ், மாவட்ட நீதிமன்ற பெண் நீதிபதிக்கு காதல் தொல்லை கொடுத்துள்ளார். நீதிபதி செல்லும் இடங்களுக்கு எல்லாம் பின்னால் சென்றுள்ளார். அந்த பெண் நீதிபதி கோர்ட்டில், வழக்கு இல்லை என்றாலும், காலை முதல் மாலை வரை அமர்ந்து, அவரையே பார்த்து கொண்டிருந்தார்.
நீதிமன்ற பணிகளை ஆய்வு செய்ய சென்ற உயர் நீதிமன்ற நீதிபதியிடம், பெண் நீதிபதி புகார் செய்துள்ளார். அவரும் வழக்கறிஞரை அழைத்து அறிவுரை கூறி, எச்சரித்துள்ளார். அதன்பின்னும், பெண் நீதிபதியை பின்தொடர்வதை நிறுத்தவில்லை.
இதுகுறித்து உயர் நீதிமன்ற உதவி பதிவாளர், பார் கவுன்சிலுக்கு புகார் அனுப்பினார்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, நீதி பரிபாலனத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், பெண் நீதிபதிக்கு மன உளைச்சலை ஏற்படுத்துதல், பெண் நீதிபதிக்கு அவதுாறு, தொந்தரவு செய்தல் போன்ற குற்றத்திற்காக, வழக்கறிஞர் தொழில் செய்ய, சிவராஜுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.