சில வரிகள்: கதண்டு வண்டுகள் கடித்து 15 பெண்கள் காயம்
சில வரிகள்: கதண்டு வண்டுகள் கடித்து 15 பெண்கள் காயம்
ADDED : நவ 28, 2026 10:22 PM

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே மூக்கம்பட்டியில், தேசிய ஊரக வேலை திட்ட பணியில் நேற்று ஈடுபட்ட, 15க்கும் மேற்பட்ட பெண்களை, அப்பகுதியில் கூடு கட்டியிருந்த கதண்டு வண்டுகள் கடித்ததால், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
திண்டுக்கல்: சேலம் மாவட்டம், ஏற்காடை சேர்ந்த கார்த்திக்ராஜா, 30, என்பவர் உட்பட குடும்பத்தினர், 8 பேர், திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு காரில் புறப்பட்டனர். நேற்று காலை, 6:30 மணிக்கு ஒட்டன்சத்திரம் அருகே காரின் முன்பகுதியில் கரும்புகை எழுந்து தீப்பிடித்ததால், காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, அனைவரும் கீழே இறங்கி தப்பினர்.
ஈரோடு: கஸ்துாரிபாளையத்தை சேர்ந்த டிரைவர் ஸ்ரீராம், 42, நவ., 21ம் தேதி வடபழனி டாஸ்மாக் கடையில் ரத்தக்கறையுடன் கிடந்தார். அவரை கட்டையால் தாக்கி கொலை செய்த, டாஸ்மாக் மதுக்கூட ஊழியரான துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கார்த்தீசன், 50, என்பவரை, அறச்சலுார் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில், தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுமி, நேற்று மாலை பள்ளி முடிந்த பின், கழிப்பறைக்கு சென்று, ‘ஆசிட்’ குடித்துள்ளார். அவரை ஆசிரியர்கள் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சின்னசேலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலுார்: வள்ளலார் பஸ் நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம் மாலை கார் மோதிய விபத்தில், முகமது என்பவரின் மனைவி நுாருமா, 21, ஒரு வயது குழந்தை இம்ரான் மற்றும், 4 மாத கைக்குழந்தை ரியான் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அன்று இரவு இம்ரான், ரியான் ஆகியோர் உயிரிழந்தனர்.
புதுச்சேரி: அரியாங்குப்பம் உடற்பயிற்சி கூடத்தில், அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மருந்தை, பயிற்சி செய்பவர்களுக்கு ஊசி மூலம் செலுத்திய, பயிற்சியாளர் கிருஷ்ணகுமார், 24, கல்லுாரி மாணவர்கள் விக்கிரமாதித்தன், 26, கிறிஸ்டோபஸ் நெல்சல், 25, ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
