ADDED : அக் 30, 2026 08:42 PM

அரியலுார்: தளவாய் போலீஸ் ராஜகண்ணன், 32, மற்றும் ஊர்க்காவல் படைவீரர் வெங்கடேசன், 35, ஆகிய இருவரை, நேற்று முன்தினம் இரவு மது போதையில் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிய பரிதி, 25, மதிவாணன், 26, தாமரைக்கண்ணன், 24, ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
நாகை: மேலக்கோட்டை வாசல் சமூக நல விடுதியில் டியூஷன் ஆசிரியராக பணியாற்றிய ஆறுமுகம், 32, விடுதி சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, 2022ல் ‘போக்சோ’வில் கைது செய்யப்பட்டார். அவருக்கு, நாகை போக்சோ நீதிமன்றம், 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது.
திண்டுக்கல்: கன்னிவாடியைச் சேர்ந்த குமார், 41, என்பவர், தன் தந்தை பொன்ராஜின் இறப்புச் சான்றிதழில் பிழை திருத்தம் செய்ய, மாநகராட்சியில் விண்ணப்பித்தார். அவரிடம், 2,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி சுகாதார அலுவலர் தங்கவேலு, 56, நேற்று மதியம் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி: ஐகிரவுண்ட் மகாராஜநகரைச் சேர்ந்த சாதிக், 60, என்பவர் வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த, 28 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள், 12 நாட்களுக்கு முன், மாயமாகின. திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
