மத்திய - மாநில அரசு பணிகளுக்கான, போட்டித் தேர்வுகளை எழுதுவோருக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள, சர் தியாகராயா கல்லுாரியில், 500 பேருக்கும், சேப்பாக்கம் மாநிலக் கல்லுாரி வளாகத்தில் 300 பேருக்கும், பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர, நாளை முதல் 31ம் தேதி வரை, www.cecc.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
உலக அளவில் பல்கலைகளுக்கு இடையிலான, எப்.ஐ.எஸ்.யு., எனப்படும் கோடைக்கால விளையாட்டுப் போட்டி, ஜெர்மனியில் ஜூலை 16 முதல் 27 வரை நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த 12 வீரர் - வீராங்கனையருக்கு, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 32.25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். மேலும், ஒன்பது வீரர் - வீராங்கனையருக்கு, 4.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, நவீன விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
மூத்த குடிமக்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் சார்பில் வேறு நபரை அனுப்பி, ரேஷன் கடையில் பொருள் வாங்கலாம். அதற்கு, பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் மீது விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு, அதிகாரிகளுக்கு, உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.