நடைபாதையில் கொடிக்கம்பம்: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் அதிரடி
நடைபாதையில் கொடிக்கம்பம்: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் அதிரடி
ADDED : அக் 13, 2024 02:55 AM

சென்னை: பொது இடங்கள், நடைபாதைகளில் உள்ள சட்டவிரோத கொடிக்கம்பங்களை அகற்றக் கோரிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக நிறுவியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவித்துள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஷியாம் குமார் என்பவர் தாக்கல் செய்த மனு:
திருவல்லிக்கேணி, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதி; ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதிகளில் அரசியல் கட்சிகளும், அரசியல் சாரா இயக்கங்களும், சாலையின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளில் கொடிக்கம்பங்களை நிறுவி உள்ளன. இதனால், நடைபாதையை, சாலையை பயன்படுத்துவோருக்கு அசவுகரியம் ஏற்படுகிறது.
மெரினா கடற்கரை செல்ல டாக்டர் பெசன்ட் சாலையில் இருந்து புறப்பட்டேன். பல இடங்களில் நடைபாதைகளில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதனால், நடைபாதையில் இருந்து இறங்கி, சாலையில் நடக்க வேண்டியதாகி விட்டது. போக்குவரத்து நெரிசல் நிறைந்த அந்த பகுதியில் நடந்து செல்லவே சிரமம் உள்ளது.
சில கொடிக்கம்பங்கள் முறையாக நிறுவப்படவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளன.
அனுமதியின்றி கொடிக்கம்பங்களை நிறுவுவது, ஆக்கிரமிப்பாகும் என்பதால், அவைகள் இல்லாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்யும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை. சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்ட விதிகள், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை.
சாலை ஓரம், நடைபாதைகளில், கொடிக்கம்பங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அதிகாரிகளின் கடமை.
எனவே, பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற நடவடிக்கை கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை.
மனுவை பரிசீலித்து, விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். கொடிக்கம்பங்களை நிறுவுவது தொடர்பாக, விதிகளை வகுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி என்.செந்தில்குமார் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்கவும், சட்டவிரோதமாக கொடிக்கம்பங்கள் நிறுவி இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும், நீதிபதி உத்தரவிட்டார்.