தரமற்ற சில்வர் கவரில் உணவு பார்சலா? ரூ.10,000 அபராதம் என கடும் எச்சரிக்கை
தரமற்ற சில்வர் கவரில் உணவு பார்சலா? ரூ.10,000 அபராதம் என கடும் எச்சரிக்கை
ADDED : நவ 18, 2024 11:32 PM

சென்னை: 'உணவு கடைகளில், தரமற்ற, 'சில்வர்' மற்றும், 'பிளாஸ்டிக் கவரில்' உணவு பார்சல் செய்தாலோ, கடையில் வைத்து விற்பனை செய்தாலோ, 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு, உரிமம் ரத்து செய்யப்படும்' என, உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்து உள்ளது. இதற்கான மாற்று பொருட்களையும் அறிவித்து, அவை பயன்பாட்டில் உள்ளன.
ஆனாலும், பிரியாணி, சாப்பாடு, சாம்பார் உள்ளிட்ட பொருட்களை பார்சல் செய்ய, பெரும்பாலான நடுத்தர மற்றும் சாலையோர ஹோட்டல்களில், 'பிளாஸ்டிக் கவர்'கள் மற்றும் தரமற்ற, 'சில்வர் பேப்பர்' பயன்படுத்தப்படுகிறது.
இவை, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
எனவே, தரமற்ற சில்வர் மற்றும் பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தால் மற்றும் கடையில் வைத்து விற்பனை செய்தால், 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு, உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
உணவு பொருட்கள் பார்சலுக்கு, முதல் தர, 'சில்வர் கவர்' பயன்படுத்தலாம். அதேநேரம், தொட்டாலே, 'சில்வர் கோட்டிங்' ஒட்டிக்கொள்ளும் வகையிலோ, சுரண்டினால் வரும் வகையிலோ இருக்கக்கூடாது. அவ்வாறு தரமற்ற சில்வர் கவர் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற தரமற்ற சில்வர் கவர் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார், சென்னை ஹோட்டல் அசோசியேஷனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'ஹோட்டல்களில் உணவு பொருட்கள் பார்சல் செய்ய, 'பிளாஸ்டிக்' பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
அவ்வாறு பயன்படுத்தினால் முதல் முறை, 2,000 ரூபாய்; இரண்டாம் முறை 5,000 ரூபாய்; மூன்றாம் முறை 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, உரிமம் ரத்து செய்யப்படும்' என்று தெரிவித்து உள்ளார்.