sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; ஏராளமானோர் பங்கேற்பு

/

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; ஏராளமானோர் பங்கேற்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; ஏராளமானோர் பங்கேற்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; ஏராளமானோர் பங்கேற்பு

23


UPDATED : ஜூன் 22, 2025 03:23 PM

ADDED : ஜூன் 22, 2025 04:04 AM

Google News

UPDATED : ஜூன் 22, 2025 03:23 PM ADDED : ஜூன் 22, 2025 04:04 AM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில், 'குன்றம் காக்க... கோவிலை காக்க...' எனும் தலைப்பிலான முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு இன்று மதியம், 3:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடைபெறுகிறது. மாநாட்டின் முக்கிய நிகழ்வாக மாலை, 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படுகிறது.

மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள, 8 லட்சம் சதுரடி பரப்பு மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மாநாடு முக்கிய நிகழ்வாக மாநாடு அரங்கிலும், வெளியிலுமாக 5 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நேரில் கலந்து கொள்ளாதவர்கள் அவரவர் வீடுகளில் இருந்து பாடலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களை மதியம், 3:00 மணிக்குள் மாநாட்டு திடலுக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். மாலை, 4:00 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடக்கிறது.

மாலை, 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படும். இதற்காக மாநாட்டு வளாகம் முழுதும் 18 எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திரையை பார்த்து பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடு


மாநாட்டுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், பாஸ் பெற வேண்டும் என போலீசார் அறிவித்திருந்தனர். இதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததால், வெளியூர்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கேற்ப வாகனங்களை பார்க்கிங் செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வண்டியூர் டோல்கேட் அருகே பிரதான சாலையில் மாநாடு வளாகம் அமைந்துள்ளதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநாட்டிற்கு வரும் முக்கிய விருந்தினர்களுக்கு சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மாநாடு வளாகத்திற்கு பொதுமக்கள் செல்ல இரு நுழைவாயில்களும், வி.ஐ.பி., வாகனங்கள் செல்ல ஒரு நுழைவாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு வளாகத்திற்கு எதிர்புறம் வாகனங்கள் நிறுத்த மிகப்பெரிய பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் செல்லும் வழியில் பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவர்.

தன்னார்வலர்கள்


வாகனங்களை ஒருங்கிணைக்கவும், பக்தர்களை வழிநடத்தவும் அந்த பகுதியில் மட்டும் 300 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு கூட்டத்திற்கு ஏற்ப பக்தர்கள் பிரித்து விடப்படுவர். மாற்றுத்திறனாளிகள் செல்ல சக்கர நாற்காலிகளும், பாலுாட்ட தனி அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாநாட்டு திடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில், 1,000 லிட்டர் தண்ணீர் டேங்குகள், 200 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டையொட்டி போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் ஐந்து துணை கமிஷனர்கள், 15 உதவி கமிஷனர்கள், 54 இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 2,279 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மாநாட்டில் பங்கேற்க சிறப்பு விமானத்தில் இன்று காலை, 11:00 மணிக்கு மதுரை வருகிறார்.

மாநாட்டை முன்னிட்டு, அறுபடை வீடுகளின் அருட்காட்சி ஜூன் 16ல் திறக்கப்பட்டது. நேற்று மாலை வரை ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக ஹந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

20 மீட்டருக்கு ஒரு தன்னார்வலர்

மாநாடு நடைபெறும் வளாகத்தில் பக்தர்களை வழிநடத்த, நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த ஹிந்து முன்னணி சார்பில் பாதுகாப்பு, சுகாதாரம், மைதானம், மருத்துவம், ஊடகம், இதர பிரிவுகள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 50 முதல் 100 பேர் என, 2,000 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டுக்கு வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்த மாவட்ட வாரியாக, 81 தன்னார்வலர்கள் குழுவும், 25 பேர் கொண்ட வழக்கறிஞர் குழுவும் தனியாக நியமிக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ தேவை ஏற்படுவோருக்கு மருத்துவ உதவி வழங்க 13 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தயார் நிலையில் 10 ஆம்புலன்ஸ்கள், இரு தீயணைப்பு வாகனங்கள் நிற்கும். மாநாடு நுழைவாயில் முதல், மாநாடு நடைபெறும் பகுதிக்கு செல்லும் வரை ஒவ்வொரு 20 மீட்டருக்கும் ஒரு தன்னார்வலர் வழிகாட்டுவார்.








      Dinamalar
      Follow us