குடிநீர் இணைப்பு கொடுத்து குவித்த சொத்துக்கள் ஏராளம்; ரெய்டுக்கு போன லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிர்ச்சி!
குடிநீர் இணைப்பு கொடுத்து குவித்த சொத்துக்கள் ஏராளம்; ரெய்டுக்கு போன லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிர்ச்சி!
ADDED : பிப் 07, 2025 09:15 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் பிட்டர் கண்ணன் என்பவர் கடந்த 15 ஆண்டுகளில் வருமானத்திற்கும் அதிகமாக 49 சதவீத கூடுதல் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பது தெரியவந்துள்ளது. சந்தை மதிப்பில், 4 கோடி ரூபாய்க்கு மேலாக சொத்துக்களை வாங்கியுள்ளதாக, அவர் மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் லஞ்ச லாவண்யம் தலை விரித்து ஆடுகிறது என, நகரவாசிகள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர். இதை, மாநகராட்சி அதிகாரிகள் மறுத்தாலும், லஞ்ச ஒழிப்புத்துறையின் ஒவ்வொரு நடவடிக்கை வாயிலாக, மாநகராட்சியில் நடக்கும் வசூல் வேட்டையும், அதிகாரிகளின் சொத்து குவிப்பு விபரமும் வெளிச்சத்துக்கு வருகிறது. மாநகராட்சி ஊழியர்கள் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்குவது போன்ற சம்பவங்கள் நடந்தபடியே உள்ளது.
முன்னாள் கமிஷனர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என பலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமீப ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பார்வை, காஞ்சிபுரம் மாநகராட்சி பக்கம் திரும்பியிருப்பதால், ஒவ்வொரு அதிகாரியாக சிக்கி வருகின்றனர். கடந்த 2023 ல், வரி விதிப்பு பெயரை மாற்றம் செய்ய, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் பில் கலெக்டர் ரேணுகாதேவியை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் நகராட்சியாக இருந்தபோது, நகரமைப்பு பிரிவில் பணியாற்றிய ஆய்வாளர் ஷியாமளா மற்றும் அவரது கணவர் சேகர் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை குவித்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து அவரது வீட்டில் சோதனை செய்தது. தற்போது காஞ்சிபுரம் மாநகராட்சியில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் பிட்டர் வேலை பார்க்கும் கண்ணன், 55. என்பவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அவர் மீதும் அவரது மனைவி கஜலட்சுமி, 49. மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
காஞ்சிபுரம் டெம்பிள்சிட்டி அருகேயுள்ள கண்ணன் வீட்டில், டி.எஸ்.பி.,கலைச்செல்வன் தலைமையில் ஆய்வாளர் கீதா, உதவி ஆய்வாளர் தமிழ்வாணன் உள்ளிட்ட ஐந்து போலீசார் சோதனை செய்து, கணக்கில் வராத 2.16 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், காஞ்சிபுரம் நகர்ப்பகுதி மற்றும் சுற்றியுள்ள இடங்களில் ஏரளமான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பது தெரியவந்துள்ளது.
மாநகராட்சியில் புதிதாக குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க வேண்டும் என்றாலோ அல்லது பழுது சரிபார்க்க வேண்டும் என்றாலோ குறைந்த பட்சம் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது நகரவாசிகள் புலம்பி வருகின்றனர். நகரவாசிகளிடம் பல ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்று, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதை நகரவாசிகள் ஆச்சரியமாக பார்க்கின்றனர். நகரமைப்பு பிரிவில் பணியாற்றிய ஷியாமலா, பிட்டர் கண்ணன் ஆகியோர் வரிசையாக சிக்கும் நிலையில், மாநகராட்சியின் பிற அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பிட்டர் கண்ணன், அவரது மனைவி பெயரில் வாங்கி குவித்த சொத்துக்கள் விபரம்:
*பெரிய கரும்பூர், அகிலாண்டேஸ்வரி நகரில், 1,200 சதுரடி வீட்டுமனை கண்ணன் வாங்கி, 2007ல் மனைவி பெயரில் பதிவு செய்துள்ளார்.
*காஞ்சிபுரம் முல்லாபாலையம் தெருவில், பூர்வீக சொத்து, 1,537 சதுரடி கொண்ட வீடு, 2010 ல் கண்ணன் பெற்றுள்ளார்.
*காஞ்சிபுரம், அரப்பணஞ்சேரியில் 903 சதுரடி வீட்டுமனை வாங்கி மனைவி பெயரில் 2013 ல் பதிவு செய்துள்ளார்.
*சின்ன காஞ்சிபுரத்தில், 912 மற்றும் 891 சதுரடி என இரு வீட்டுமனைகள் வாங்கி, தனது மனைவி பெயரில் 2014 ல் வாங்கிய கண்ணன், மனைவி பெயரில், 2019 ல் தான செட்டில்மென்ட்டாக பதிவு செய்துள்ளார்.
*காஞ்சிபுரம், தும்பவனத்தில் 2,368 சதுரடி வீட்டுமனை வாங்கிய கண்ணன், மனைவி பெயரில் 2014 ல் பதிவு செய்துள்ளார்.
*சின்ன காஞ்சிபுரத்தில், 954 சதுரடி வீட்டுமனை வாங்கிய கண்ணன், 2020 ல் மனைவி பெயரில் பதிவு செய்துள்ளார்.
*தும்பவனம் பட்டரையில், 1,066 சதுரடி வாங்கி, 2014 ல், மனைவி பெயரில் பதிவு செய்துள்ளார். இந்த இடத்தில் குடோன் ஒன்றை கட்டியுள்ளனர்.
*தும்பவனம் பட்டரையில், 1,044 சதுரடி வாங்கி, 2014 ல், மற்றொரு சொத்து மனைவி பெயரில் பதிவு செய்கிறார்.
*துவம்பவனம், காமாட்சியம்மன் அவென்யூவில் 1,500 சதுரடி கொண்ட இடம் மற்றும் வீட்டை வாங்கிய கண்ணன், தனது மனைவி பெயரில் 2017 ல் பதிவு செய்துள்ளார்.
*காஞ்சிபுரம் ரயில்வே ரோட்டில், 416 சதுரடியில் வீடு ஒன்றை கண்ணன் வாங்கியுள்ளார். 2017 ல் மனைவி பெயரில் இந்த சொத்தையும் பதிவு செய்துள்ளார்.
* நத்தப்பேட்டையில், 2,100 சதுரடி வீட்டு மனை வாங்கிய அவர், மனைவி பெயரில் 2020 ல், பதிவு செய்துள்ளார். இங்கு, பெரிய குடோன் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
* அசையும் சொத்துகள் பட்டியலில், கண்ணனின் மகள் பெயரில் 2018 ல் ஒரு ஸ்கூட்டரும், மனைவி பெயரில் 4 சரக்கு வாகனங்களும், ஒரு ஸ்கூட்டரும் வாங்கியுள்ளனர்.
அரிசி, தண்ணீர் வியாபாரம்
கண்ணன், கஜலட்சுமி தம்பதிக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அரசு ஊழியரான கண்ணன் தன் பெயருக்கு வாங்கிய சொத்துக்கள் பலவற்றை, மனைவி பெயரில் மாற்றியுள்ளார். மனைவி கஜலட்சுமி, குடிநீர் கேன், அரிசி வியாபாரம், பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வந்துள்ளார். இருவரது வருமானம், செலவினம், கடன் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை ஆய்வு செய்த பின், வருமானத்துக்கு அதிகமாக 49 சதவீதம் கூடுதலாக சொத்துக்கள் உள்ளது தெரியவந்துள்ளது.
யார் அந்த கண்ணன்
காஞ்சிபுரம் நகராட்சியாக இருந்தபோது, கடந்த 1994 ல், குழாய் சுத்திகரிப்பாளராக, கண்ணன் பணியில் சேர்ந்துள்ளார். அதையடுத்து, 2015 ல், பிட்டராக பணி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார். காஞ்சிபுரத்திலேயே 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருவதால், குடிநீர் இணைப்புக்கு வசூல் செய்ய ஏதுவாக இருந்துள்ளது.
இவர் அதிகளவு சொத்துக்களை வாங்கி குவித்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு கிடைத்த தகவலால், கடந்த 2014 ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். கடந்த 2014 ம் ஆண்டு, கண்ணன் மற்றும் அவரது மனைவி கஜலட்சுமி பெயரில், வெறும் 6.64 லட்ச ரூபாயாக இருந்த சொத்து மதிப்பு, 2021 ல் 97.99 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது வருமானத்தை காட்டிலும் 49 சதவீதம் அதிகம். அரசின் வழிகாட்டி மதிப்பின்படி, 97.99 லட்ச ரூபாயாக உள்ள சொத்துக்கள், சந்தை மதிப்பில் 4 கோடி ரூபாய்க்கு மேலாக இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர்.