உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; இன்று முதல் டிச.,19 வரை கன மழை
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; இன்று முதல் டிச.,19 வரை கன மழை
ADDED : டிச 17, 2024 05:35 AM

சென்னை: 'தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இன்று முதல், 19ம் தேதி வரை, சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய, வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, அடுத்த இரு தினங்களில் மேலும் வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில், தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இன்றும், நாளையும், கடலோர தமிழகத்தில் அனேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்.
எச்சரிக்கை
இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்சு அெலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், கன முதல் மிக கன மழை பெய்யும் என்பதால், 'ஆரஞ்சு அெலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
மாஞ்சோலை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுதினம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 3; நாலுமுக்கு, காக்காச்சி பகுதியில் தலா 2; மாஞ்சோலையில் ௧ செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.