ADDED : நவ 10, 2024 07:58 AM

உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், செட்டி மொடக்கு மலைப்பகுதியில், யானை குட்டி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது, வனப்பணியாளர்கள் ரோந்து பணியின் போது பார்த்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா, வனச்சரகர் மணிகண்டன் மற்றும் பொள்ளாச்சி வனக்கால்நடை டாக்டர் விஜயராகவன் குழுவினரால், யானைக்குட்டி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
வனத்துறையினர் கூறுகையில், 'இறந்து கிடந்த ஆண் யானைக்குட்டிக்கு, 5 வயது இருக்கும். முன் மார்பின் உள் பகுதியில் அடிபட்டுள்ளது. வெளிப்புற காயங்கள் ஏதும் தென்படவில்லை. யானைக்குட்டி, நடந்து செல்லும் போது, பாறையில் வழுக்கி விழுந்திருக்க வேண்டும். இதனால், மார்பு பகுதியில் அடிபட்டுள்ளது. அதே போன்று, முன் கால் பகுதியில் உள்காயம் ஏற்பட்டு, 2, 3 நாட்கள் சுற்றிய நிலையில், இறந்திருக்க வாய்ப்புள்ளது' என்றனர்.