ஒரு மனிதர், ஒரு இயந்திரம் காக்கா ஆழியை அழிக்கும் லட்சணம்: நீர்வளத்துறை மீது தீர்ப்பாயம் கோபம்
ஒரு மனிதர், ஒரு இயந்திரம் காக்கா ஆழியை அழிக்கும் லட்சணம்: நீர்வளத்துறை மீது தீர்ப்பாயம் கோபம்
ADDED : அக் 23, 2024 05:11 AM

சென்னை: ஒரு மனிதர், ஒரு இயந்திரத்தால் காக்கா ஆழியை அழிப்பது போன்ற புகைப்படங்களை தாக்கல் செய்த நீர்வளத்துறை மீது, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளது.
'தென் அமெரிக்க மஸ்ஸல் எனப்படும், காக்கா ஆழி வெளியிடும் துர்நாற்றம் உடைய கசடுகளால், இறால், மீன் உள்ளிட்ட கடல் உயிரினங்கள் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது.
நீரோட்டம் பாதிப்பு
இதனால், பழவேற்காடு ஏரி போன்ற உப்பங்கழிகளை நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, அவற்றை அழிக்க உத்தரவிட வேண்டும்' என, குமரேசன் சூளுரன் என்பவர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, கடந்த 3ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 'காக்கா ஆழி இருப்பதால் கொசஸ்தலை ஆற்றில், காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம், அத்திப்பட்டு ஆகிய இடங்களில் நீரோட்டம் தடைபடுகிறது.
'எனவே, அக்டோபர் 7ம் தேதி கை முறையாகவோ, இயந்திரங்கள் வாயிலாகவோ காக்கா ஆழியை அழிக்கும் பணி துவங்கும்' என, நீர்வளத்துறை தெரிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
கொசஸ்தலை ஆற்றில் காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம், அத்திப்பட்டு ஆகிய இடங்களில், காக்கா ஆழியை அகற்றும் பணி, அக்டோபர் 7ல் துவங்கும் என, நீர்வளத்துறை தெரிவித்தது. ஆனால், அக்டோபர் 20ல் தான் துவங்கப்பட்டு உள்ளது.
முன்னேற்றம் இல்லை
நீர்வளத்துறை தாக்கல் செய்த புகைப்படங்கள், காக்கா ஆழியை அகற்றும் பணியில், ஒரே ஒரு மனிதர் ஈடுபட்டுள்ளதை காட்டுகின்றன. அதுபோல காக்கா ஆழியை அகற்றுவதில், ஒரு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர, காக்கா ஆழியை அகற்றுவதில், எந்த முன்னேற்றமும் இல்லை.
தீர்ப்பாயம் பலமுறை உத்தரவிட்டும் காக்கா ஆழியை அகற்றத் தயங்குவது ஏன் என்பது குறித்து, நீர்வளத்துறை வரும் 24ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

