ADDED : ஜன 02, 2024 11:20 PM

கோவை,:கோவை வாகராயம்பாளையம் பகுதியில், திமிங்கலத்தின் எச்சமான அம்பர்கிரீசை ஒருவர் விற்பனை செய்ய முயல்வதாக, தகவல் கிடைத்தது.
கோவை மற்றும் திருப்பூர் வனத்துறையினர், தமிழ்நாடு வன மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பிரிவான டி.என்.எப்.டபிள்யு.சி.சி.பி., அதிகாரிகள் உதவியுடன், வியாபாரிகள் போல், வாகராயம்பாளையம் டாஸ்மாக்குக்கு சென்றனர்.
அங்கிருந்த, அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன், 48, என்பவர் திமிங்கல எச்சத்தை விற்க முயன்றபோது கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கிலோ எடையுள்ள திமிங்கிலத்தின் எச்சத்தை கைப்பற்றினர்.
விசாரணையில், கேரளாவில் இருந்து திமிங்கலத்தின் எச்சத்தை பெற்ற இளங்கோவன், அதை ஒரு கிலோ, 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றது தெரிந்தது.
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கைப்பற்றப்பட்ட திமிங்கலத்தின் எச்சம், கொல்கத்தாவில் உள்ள இந்திய வனவிலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்தின் ஆய்வகத்துக்கு அனுப்பி, உண்மை தன்மை பரிசோதிக்கப்படும். இளங்கோவன் சிறையில் அடைக்கப்பட்டார்' என்றனர்.
சர்வதேச சந்தையில், திமிங்கல எச்சம் அதன் தரத்தை பொறுத்து, ஒரு கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை விற்பனையாவதாக கூறப்படுகிறது.