கோயில் இடத்தில் பறக்கும் கொடி; திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சை
கோயில் இடத்தில் பறக்கும் கொடி; திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சை
UPDATED : டிச 10, 2025 10:27 AM
ADDED : டிச 10, 2025 05:43 AM

மதுரை: 'மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கோயில் இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில், நிலா பிறை போட்ட கொடி புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதனை அகற்ற வேண்டும்' என சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகத்திடம் ஹிந்து மக்கள் கட்சியினர் புகார் அளித்தனர்.
மாவட்ட தலைவர் சோலைகண்ணன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்திருப்பதாவது: கோயில் மலை மீது பழமையான தலைவிரிச்சான் மரம் என்று அழைக்கப்படும் கல்லத்தி மரம் உள்ளது. இங்கிருந்து 100 மீட்டருக்கு மேல் தர்கா உள்ளது. சந்தனக்கூடு விழாவின்போது ஆண்டுக்கு ஒருமுறை தர்காவுக்கு உள்ளே உள்ள கொடிமரத்தில்தான் நிலா பிறை போட்ட சிவப்புக்கொடி ஏற்றப்படும்.
கல்லத்தி மரத்திலும் நிலா பிறைபோட்ட கொடி அண்மையில் ஏற்றப்பட்டுள்ளது.
மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் மகா தீபம் ஏற்ற ஆட்சேபனை தெரிவிக்காத தர்கா நிர்வாகத்திற்கு கட்சி சார்பில் நன்றி. அதேசமயம் கோயில் இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தை ஆக்கிரமிக்கும் நோக்கோடு தர்கா நிர்வாகம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
டிச.,21ல் சந்தனக்கூடு விழாவில் கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை இறக்கி மீண்டும் ஏற்ற தர்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதை காரணம் காட்டி மரமும் தர்கா நிர்வாகத்திற்கு சொந்தம் என உரிமை கொண்டாடும் விதமாக வருங்காலத்தில் சர்ச்சையாகவும், பிரச்னையாகவும் மாற வாய்ப்புள்ளது.
எனவே கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை ஆரம்பநிலையில் உடனே அகற்ற வேண்டும். மரத்தில் சேவல் படம் போட்ட கொடியை ஏற்ற வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

