'பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கட்சி': தி.மு.க.,வுக்கு திவ்யா சத்யராஜ் புகழாரம்
'பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கட்சி': தி.மு.க.,வுக்கு திவ்யா சத்யராஜ் புகழாரம்
ADDED : ஜன 20, 2025 06:21 AM

சென்னை : நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் நேற்று இணைந்தார்.
நடிகர் சத்யராஜுக்கு சிபி என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபி, திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். திவ்யா ஊட்டச்சத்து நிபுணராகவும், சமூக ஆர்வலராகவும் உள்ளார்.
'மகிழ்மதி' என்ற இயக்கம் வாயிலாக, ஊட்டச்சத்து குறைந்த மாணவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.
சமூக வலைதளங்களில், அரசியல் ரீதியான கருத்துக்களையும் பதிவு செய்து வந்தார். இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் நேற்று இணைந்தார். அப்போது, கட்சியின் பொருளாளர் பாலு, அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு உடனிருந்தனர்.
நிருபர்களிடம் திவ்யா கூறியதாவது:
ஊட்டச்சத்து நிபுணராக இருக்கும் நான், ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவள். தி.மு.க.,வும் அதே மாதிரியே உள்ளது. ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலேயே, தமிழக அரசு வாயிலாக காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றனர்.
அதேபோல, தி.மு.க., பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கட்சி. அதற்கு உதாரணம் புதுமைப் பெண் திட்டம். அனைத்து மதத்திற்கும் மரியாதை தரும் கட்சி. இதெல்லாம் எனக்குப் பிடித்திருந்தது.
அதேநேரம் எனக்கும், மக்கள் பணி செய்ய வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. கட்சியில் எனக்கு என்ன பதவி தந்தாலும், அதற்கு நான் உண்மையாக இருந்து உழைப்பேன். மக்கள் நலனில் மட்டுமே அக்கறையுடன் செயல்படும் நான், எதையும் எதிர்பார்த்து தி.மு.க.,வில் இணையவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.