4 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு அ.தி.மு.க.,வில் பதவி
4 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு அ.தி.மு.க.,வில் பதவி
ADDED : அக் 05, 2025 01:42 AM
ஈரோடு: இறந்தவருக்கு அ.தி.மு.க.,வில் பதவி அளித்துள்ளதால், அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வலியுறுத்தி, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்தார்.
இதையடுத்து, செங்கோட்டையனின் கட்சி பதவிகளை பழனிசாமி பறித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள, செங்கோட்டையனின் ஆதரவாளர்களின் கட்சி பதவிகளும் அடுத்தடுத்து பறிக்கப்பட்டு வருகின்றன. பதவி பறிப்பால் காலியாகும் இடங்களுக்கு, புதிய நிர்வாகிகளை பழனிசாமி அறிவித்து வருகிறார்.
அதன்படி, ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க., பொருளாளராக செல்வராஜ் என்பவரை, நியமிப்பதாக, நேற்று முன்தினம் பழனிசாமி அறிவித்தார்.
ஆனால், நான்கு மாதங்களுக்கு முன்பே, செல்வராஜ் இறந்து விட்டார். இதைக்கூட விசாரிக்காமல், நிர்வாகிகள் நியமனத்தை பழனிசாமி அறிவித்ததால், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.