ADDED : டிச 11, 2025 02:01 AM

உலகளாவிய மற்றும் உள்நாட்டு சந்தை நிலவரங்களுக்கு மத்தியில், ரூபாய் மதிப்பு, நேற்று ஒரு குறுகிய வரம்புக்குள் வர்த்தகமானது. கடந்த வாரம் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்த ரூபாய் மதிப்பு, சற்று மீண்டு, 88.77-90.08 என்ற வரம்பிற்குள் நிலைபெற்றது.
அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் 7.67 மில்லியனாக உயர்ந்திருப்பது, பணியமர்த்தல் வேகம் குறைந்தாலும் தொழிலாளர்களுக்கான தேவை இன்னும் வலுவாக இருப்பதைக் காட்டுகிறது.
அந்நாட்டின் பெடரல் வங்கி கூட்டத்தில், வட்டி விகிதக் குறைப்பு குறித்து அதன் தலைவர் ஜெரோம் பவலின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் நிலவுவதால், டாலர் மதிப்பு ஸ்திரமாக உள்ளது.
இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதிக்கு புதிய வரி விதிப்பது குறித்து பரிசீலிப்பதாக ட்ரம்ப் கூறியிருப்பது, இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நிறைவேறுமா என்ற சந்தேகத்தை எழுப்பிஉள்ளது.
உள்நாட்டில் வரிசைகட்டி நிற்கும் ஐ.பி.ஓ.,க்கள் வாயிலாக பெரிய அளவில் நிதி திரட்டுவது, அன்னிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க உதவுகிறது. இது, ரூபாய்க்கு குறுகியகால ஆதரவை வழங்குகிறது.
தற்போதைய நிலவரப்படி, ரூபாய் மதிப்பு அடுத்த சில நாட்களில் 89.20 - 90.30 என்ற பரந்த வரம்பிற்குள் நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

