ADDED : நவ 29, 2024 11:56 PM
சென்னை:அழிந்து வரும், அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களை பாதுகாக்க, 50 கோடி ரூபாயில், தனி நிதியம் அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
கால சூழல் மாற்றத்தால், சில அரிய வகை உயிரினங்கள் அழிந்து வருகின்றன. சில உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.
இத்தகைய உயிரினங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதால், இதற்காக நிரந்தரமாக செயல்படும் வகையில், தனி நிதியம் ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது.
அதைத்தொடர்ந்து, 'அழியும் நிலையில் உள்ள உயிரினங்களை பாதுகாக்க, 50 கோடி ரூபாயில், தனி நிதியம் ஏற்படுத்தப்படும்' என்று, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதை நிறைவேற்றும் வகையில், அழிந்து வரும் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள, உயிரினங்கள் பாதுகாப்பு நிதியம் ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட அரசாணையில், 'நிதியம் 50 கோடி ரூபாய் அடிப்படை நிதியில் செயல்படும், இதற்கு துவக்கமாக, தமிழக அரசு, 5 கோடி ரூபாயை வழங்கி உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.