பலத்தை காட்டிய மகன்; சமாதானம் அடையாத தந்தை: பா.ம.க., மாநாட்டில் அரங்கேறிய காட்சிகள்
பலத்தை காட்டிய மகன்; சமாதானம் அடையாத தந்தை: பா.ம.க., மாநாட்டில் அரங்கேறிய காட்சிகள்
UPDATED : மே 13, 2025 05:59 AM
ADDED : மே 13, 2025 05:55 AM

சென்னை : சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி தன் பலத்தை காட்டினாலும், ராமதாஸ் சமாதானம் அடையவில்லை என்பதை, அவரது மாநாட்டு பேச்சு காட்டுவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
பா.ம.க., இளைஞரணி தலைவராக தன் மகள்வழி பேரன் முகுந்தன் பரசுராமனை, கடந்த 2024 டிச., 28ல் நடந்த பொதுக்குழுவில், ராமதாஸ் நியமித்தார்.
மகிழ்ச்சி
அதற்கு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, தந்தை -- மகன் இடையே நிலவிய மோதல் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில்தான், கடந்த ஏப்ரல் 10ல், பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து, அன்புமணியை நீக்கிவிட்டு, 'கட்சிக்கு நிறுவனரும் நான் தான்; தலைவரும் நான் தான்' என, ராமதாஸ் அறிவித்தார்.
கட்சியின் செயல் தலைவராக அன்புமணி தொடருவார் என்றும் அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்புகளை ஏற்க மறுத்த அன்புமணி, 'எப்போதும்போல் தலைவராக தொடர்கிறேன்' என, அறிவித்தார்; அதற்கு ராமதாஸ், எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால், இருவரும் சமாதானமாகி விட்டதாக கூறப்பட்டது.
மாமல்லபுரத்துக்கு அருகில் உள்ள திருவிடந்தையில், நேற்று முன்தினம் நடந்த மாநாட்டு பணிகளில், அன்புமணி தீவிரமாக ஈடுபட்டார். அவரது மனைவியும், 'பசுமை தாயகம்' தலைவருமான சவுமியாவும், மகள்களும், மாநாட்டு பணிகளை ஆர்வமாக கவனித்தனர். கடந்த ஒரு மாதமாக, பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று, பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து, மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
மாநாட்டில் பெரும் எண்ணிக்கையில் தொண்டர்கள் திரண்டதால், அன்புமணி மகிழ்ச்சி அடைந்தார். அந்த மகிழ்ச்சி, அவரது மாநாட்டு பேச்சில் தெரிந்தது. ஆனால், நிறைவுரை ஆற்றிய ராமதாஸ் கொஞ்சம் கடுமையாகவே பேசினார். 'இவ்வளவு நாள் என் பேச்சைக் கேட்டீர்கள்; இடையில் மறந்தீர்கள். என் பேச்சை கேட்டு செயல்பட்ட போது, நாம் தனித்து நின்ற நிலையிலும், நான்கு தொகுதிகளில் வென்றோம்.
இன்று, கூட்டணியில் சேர்ந்து, ஐந்து தொகுதிகளில் வென்றுள்ளோம். கட்சி பதவியில் இருந்து கொண்டு உழைக்காமல் இருந்தால், அவர்களின் பதவியை பறித்து கணக்கை முடித்து விடுவேன். எம்.எல்.ஏ., என்றெல்லாம் பார்க்க மாட்டேன்; கடலில் வீசி விடுவேன். எனக்கு 87 வயது. கிழவனுக்கு வயசாகிடுச்சுனு யாரும் என்னை ஏமாற்ற முடியாது; அப்படி செய்யலாம் என ஒருபோதும் நினைக்காதீர்கள்.
அதிர்ச்சி
கடந்த கால அனுபவங்களையெல்லாம் கொண்டு, கூட்டணியை நானே முடிவு செய்வேன்' என, பேச்சில் அதிரடி காட்டினார். இது, பா.ம.க.,வில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, பா.ம.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கடந்த 12 ஆண்டுகளுக்குப் பின், மாமல்லபுரம் திருவிடந்தையில், சித்திரை முழுநிலவு மாநாடு வெற்றிகரமாக நடந்துள்ளது. வன்னியர் சங்கத் தலைவராக இருந்த காடுவெட்டி குரு இல்லாமல், மாநாட்டை நடத்துவது எளிதல்ல என்றனர். ஆனால், இரண்டு மாதங்களாக கடுமையாக உழைத்து, மாநாட்டை அன்புமணி வெற்றிகரமாக நடத்தித் காட்டியுள்ளார். ஆனால், ராமதாஸ் தன் உரையில், அன்பு மணியின் பெயரை ஒருமுறை மட்டுமே குறிப்பிட்டார்.
கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர், ராமதாசை தவறாக வழிநடத்தி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். பா.ம.க.,வின் எதிரி களை அடையாளம் காட்ட வேண்டிய ராமதாஸ், சொந்த கட்சிக்குள் குழப்பம் இருப்பதை போலவும், ஆளாளுக்கு ஒவ்வொரு அர்த்தம் கொள்ளும்படியும் பேசியிருப்பது, கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.